Tuesday, January 17, 2017

ஜல்லிக்கட்டு தடையை உடைக்கும் வீர தமிழர்கள்

அவசர சட்டம் வரும் வரை போராட்டம் ஓயாது:
சரித்திரம் படைக்கும் வீர தமிழர்கள்
----------------------------------

அலங்காநல்லூர், மெரீனா, கோவை, சேலம், ஈரோடு மற்றும் பல பகுதிகளில்
ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வேண்டும் என்று மக்கள் போராடி வருகிறார்கள்.

500 ரூபாய்க்கு கூடின கூட்டம் இல்ல.
குவாரட்டருக்கும், பிரியாணிக்கும் கூடின கூட்டம் இல்ல.
மதத்திற்கோ, ஜாதிக்கோ, அரசியல் கட்சிக்கோ கூடிய கூட்டம் இல்ல.
தமிழர்கள் என்ற உணர்வினால் கூடிய கூட்டம்.
தமிழர்களின் பண்பாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வினால் கூடிய கூட்டம்.

8ந் தேதி மெரீனாவில் ஜல்லிக்கட்டு வேண்டி லட்சக்கணக்கான இளைஞர்கள் பேரணி நடத்தினார்கள்.
அப்போதில் இருந்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
திங்கள் அன்று இளைஞர்கள் அலங்காநல்லூரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
அவர்களுடன் ஊர் மக்களும் சேர்ந்து போராடினார்கள்.

இரவு முழுவதும் கொட்டும் பனியில் போராடினார்கள்.
ஊர் மக்களை அவங்களுக்கு சாப்பாடு தண்ணீர் கொடுக்க விடாமல் காவல்துறை தடுத்திருக்கிறார்கள்.
மின்சாரத்தை நிறுதிட்டாங்க. 24 மணி நேரம் இயற்கை உபாதையை கூட கழிக்க முடியாமல்
நமக்காக போராடினார்கள் அந்த வீர தமிழர்கள்.

காலையிலை 6 மணிக்கு காவல்துறை 10 நிமிட நேரம் தருகிறோம், கலைந்து விடுங்கள் என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள்.
என்னோட மனது தவித்தது. நமக்காக போராடும் நம் சொந்தங்களை என்ன பண்ண போறாங்களோனு கவலை வாட்டுச்சு.
அமைதியாக போராடும் இவர்களை ஏன் காவல்துறை மிரட்டுகிறது என்று கோபம் வந்தது.

ஆனால், அந்த இளைஞர்கள் சிறிதளவும் பயத்தையோ, தயக்கத்தையோ காட்டவில்லை.
ஒருவரை ஒருவர் தங்களின் கைகளை பிடித்துக் கொண்டு, தங்கள் கொள்கையில் உறுதியாய் இருந்தார்கள்.
பார்க்கும் போது என் மனத்தில் ஒன்று தோன்றியது, “இனி தமிழகத்தை இவர்கள் காப்பாற்றி விடுவார்கள்” என்று மனம்
உறுதியாய் கூறியது.

பத்து நிமிடத்திற்கு பின்னர், அவர்களை விலகி செல்ல சொன்னார்கள்.
அவர்கள் நகரவில்லை. அவர்களை குண்டு கட்டாய் தூக்கி சென்றார்கள்.
அப்போதும் இளைஞர்கள் அசரவில்லை. எங்கு அழைத்து சென்றாலும், போராட்டம் தொடரும் என்று முழக்கமிட்டு கொண்டே போனார்கள்.
போராட்டத்தில் இருந்த ஒரு பெண்ணின் கையை காவல்துறை உடைத்து விட்டார்கள்.
அவர்களை விடுவிக்க கோரி ஆயிரக்கணக்கான கிராம மக்கள் செவ்வாய்கிழமை காலை முதல் போராட்டம் செய்து வருகிறார்கள்.
அதே போல் சென்னை மெரீனாவிலும் தொடர் போரட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் போராட்டம் நடக்கிறது. புதுவையிலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

விடிய விடிய போராட்டம் நடக்குது. அரசு சார்பா யாரும் வரலை.
எம்.ஜி. ஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடி விட்டு, வீட்டில் ஓய்வு எடுத்து விட்டு
இரவு 2 மணிக்கு அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள்.
அவங்க மெரீனாவுக்கு வந்து பேசினா, கிரீடம் விழுந்திடுமே.
ஓட்டு கேக்க நம்மை தேடி வருவாங்க. அவங்க வேலையை செய்ய சொல்றதுக்கு நாம அவங்களை தேடி போகனும்.
இது தான் நம் நாட்டில் இருக்கும் கேவலமான ஜன்நாயகம்.
அது மாறும் காலம் விரைவில் வரும்.

அமைச்சர்கள் ஜெயக்குமார், மாவா பாண்டியன் ஆகியோர் பத்து பேர் கொண்ட குழுவை அழைத்து பேச்சு நடத்தினார்கள்.
அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும். முதலமைச்சரின் அறிக்கை காலையில் வெளிவரும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அவசர சட்டம் இயற்றப்படாமல் நகர போவதில்லை என்று தான் பெரும்பாலான இளைஞர்கள், மாணவர்களும் கூறி வருகிறார்கள்.

இத்தனை ஆண்டுகள் பொறுமை காத்தது போதும் என்று இளைஞர்கள் களத்தில் குதித்து இருக்கிறார்கள்.
பெரியவர்களும் இதில் பங்கேற்று தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும்.
போராட்டம் இன்னும் பெரிதாக வேண்டும்.
எத்தனையோ வழக்கில் சுப்ரீம் கோர்ட் மக்கள் போராட்டத்தின் வீரியம் காரணமாக தானாகவே தலையீட்டு தீர்ப்பு அளித்திருக்கிறார்கள்.
டில்லியில் தொடர் போராட்டத்தினால் தான் லோக் பால் சட்டமே நிறைவேறியது.
எனவே, போராட்டத்தின் மூலம் அவசர சட்டத்தை உடனடியாக இயற்ற செய்ய வேண்டும்.

அறிக்கையில் இருப்பதையும், 110 விதியில் பேசறதையும் இவங்க எப்படி நிறைவேற்றுவாங்கனு நல்லாவே தெரியும்.
அதனால அவங்க அறிக்கையை நம்ப முடியாது.
அவசர சட்டம் மட்டுமே இதற்கு ஓரே தீர்வு.

அதிகாரவர்க்கத்திற்கு துணை நிற்கும் காவல்துறை அடிமைகள் மக்கள் மீது தடி அடி நடத்துவதை நிறுத்த வேண்டும்.
அலங்காநல்லூரில போராடுறவங்க நக்சல் தீவிரவாதிகளுனு ஊர்காரங்க கிட்ட பொய் சொல்லிருக்காங்க. ஆனா ஊர்க்காரங்க நம்பலை.
உங்களுக்கு தமிழன் என்ற உணர்வே இல்லையா? நீங்க போராடலனாலும் பரவாயில்லை, மக்களை தாக்காதீங்க.
உங்கள் அடிமைத்தனத்திற்கு விடுதலை அளிக்கப்போவதும் மக்கள் போராட்டம் தான்.
அதனால் அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.

முதுக்கெலிம்பில்லாத அதிமுக அமைச்சர்களே, முதலமைச்சரே, இனிமேலும் வெறும் வாய் சவடால் விட்டுக்கொண்டு இருக்காதீங்க.
இளைஞர்கள் களத்தில் இறங்கி விட்டார்கள். புள்ளி வைத்தாகி விட்டது. ஆரம்பம் உண்டானது.
உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம்.

பிஜேபியினரே, தமிழகத்தில் தயவு செய்து உங்க கட்சியை மூடிட்டு போயிடுங்க.
மூன்று வருசமா ஆட்சியிலை இருக்கீங்க. நீங்க கிழிச்சது எல்லாம் போதும்.
மக்கள் போராடிக்கிட்டு இருக்காங்க. எம்.ஜி.ஆர் பேரன்கள் உங்க கட்சியிலை சேர்ந்துட்டாங்கனு பெருமை பீத்திக்கிறீங்க.
உங்களை திருத்தவே முடியாது.

தலைவரே இல்லாமல், சமூக வலைத்தளங்கள் மூலமாய் கூடி ஒரு வரலாற்றை நம் இளைஞர்கள் உருவாக்கி வருகிறார்கள்.
கலந்து கொள்ள முடிந்தவர்கள் நேரில் வந்து போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.
இயலாதவர்கள் எங்கிருந்தாலும் உங்களுடைய ஆதரவை தொடர்ந்து தாருங்கள்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறீர்கள்.
உங்கள் அனைவருக்கும் நன்றி.

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot