Thursday, March 30, 2017

”கடவுள் இல்லை” என்று சொன்ன இஸ்லாமியர் கொலை

பரூக் என்ற 31 வயது முஸ்லிம் இளைஞர் கோயமுத்தூரில் வசித்து வந்தார்.
அவர் டிராவிடர் விடுதலை கழகம் என்ற அமைப்பில் உறுப்பினராக இருந்தார்.
கடவுள் மறுப்பு கொள்கை மற்றும் தீண்டாமை எதிர்ப்பு ஆகியவற்றில் ஆர்வமாய் இருந்தார்.
பேஸ்புக் மற்றும் வாட்ச் ஆப்பில் தன்னுடைய கருத்துகளையும் பதிவிட்டு வந்தார்.

பரூக் கடவுள் நம்பிக்கைக்கு எதிராகவும், மத நம்பிக்கைக்கு எதிராகவும் பிரசாரம்
செய்தது பரூக்கின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கடும் கோபத்தை தந்தது.

ஒரு சில தினங்களுக்கு முன்னர் 400 பேர்களை உள்ளடக்கிய வாட்ச் ஆப் குருப்பில்
அவர் அனுப்பிய ஒரு போட்டோ தான் அவருக்கு பெரும் பிரச்சனையை கொடுத்தது.
அந்த போட்டோவில் பரூக்கின் மகள் ஒரு காகிதத்தில் கடவுள் இல்லை கடவுள் இல்லை என்று எழுதி
தன் கையில் வைத்திருக்கிறார்.  தன்னுடைய குழந்தைகளை வருங்காலத்தில் நாத்திகர்களாக வளர்க்கப் போவதாகவும் பரூக் சபதம்
செய்திருக்கின்றார்.

இது அந்த வாட்ஸ் ஆப்பில் இருக்கும் சில நபர்களை கோபப்படுத்தியது.
பரூக் கடவுள் மறுப்பு கொள்கையை பின்பற்றுவதையும், மத நம்பிக்கைக்கு எதிராக செயல்படுவதையும் அனுமதிக்க முடியாது
என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.

ஒரு நாள் பரூக்கின் நண்பர் முனவ்விடம் இருந்து ஒரு போன் கால் வருகிறது.
தன்னுடைய மோட்டர் பைக் நின்று விட்டது என்றும் தனக்கு உதவ முடியுமா என்றும் அவர் கேட்டிருக்கிறார்.
நண்பர்களுக்கு உதவி தேவை என்றால் உடனே கிளம்பி விடுவது பரூக்கின் வழக்கம்.
அன்றும் நண்பனுக்கு உதவ உடனே கிளம்பினார்.
போனவர் திரும்பவே இல்லை. அவரை கொடூரமாய் கொன்று விட்டார்கள்.

இந்த கொலையை தாங்கள் தான் செய்தோம் என்று அன்சார்த், சதாம் உசேன், சம்சுதின், முனப், அக்ரம்
ஆகியோர் போலீசில் சரண் அடைந்தார்கள். ஜாபர் என்பவரை அவரின் தந்தையே போலீசில் ஒப்ப்டைத்தார்.
இந்த 6 பேரில் 3 பேர் பரூக்கின் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் சிலரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஃபாரூக் என்ன தவறு செய்தார்? யார் குடியைக் கெடுத்தார்?
மசூதியை இடிக்க கடப்பாரையைத் தூக்கிக்கொண்டு போனாரா?
அல்லது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து, கருவறுக்கப் போனாரா?
இல்லையே.

ஒருவர் கடவுள் எதிர்ப்பு கொள்கையை பின்பற்றுவது அவரின் உரிமை.
அதை யாராலும் தடுக்க முடியாது. அது தானே நம் சட்டமும் சொல்கிறது.
கடவுள் எதிர்ப்பு கருத்துகளை சொன்னால், கொன்று விடுவோம் என்று சொல்வது
அந்த மதத்தில் சகிப்பு தன்மை இல்லை என்பதை தானே காட்டுகிறது
சகிப்பு தன்மையை போதிக்கவில்லையெனில் மதமே தோற்று விட்டது என்று தானே அர்த்தம்.

பரூக்கை கொல்வதற்கு திட்டம் தீட்டும் போது அவரை நம்பி அவருடைய மனைவியும் இரண்டு குழந்தைகளும்
இருக்கிறார்கள் என்பதை பற்றி சற்றும் கவலைப்படாதவர்கள் பின்பற்றும்
மதத்தில் மனிதாபிமானம் போதிக்கப்படவில்லை என்பதை தானே காட்டுகிறது.

பரூக் மத நம்பிக்கைக்கு எதிராக பேசினால், அதற்கு பதில் சொல்லியிருக்க வேண்டும்.
கருத்தை கருத்தால் தானே எதிர்கொள்ள வேண்டும்.
மாறாக கொலை செய்வது மன்னிக்கவே முடியாத தவறு.
பரூக்கை கொன்றால் தான் மதத்தை காப்பாற்ற முடியும் என்றால் பரூக்கின் கேள்விகளுக்கு அந்த
மதத்தால் பதில் சொல்ல முடியவில்லை என்பதை தானே காட்டுகிறது.
பரூக் என்ற ஒத்தை ஆளை கொன்றால் தான் மதத்தை காப்பாற்ற முடியும் என்றால் அந்த மதம் பலவீனமானது
என்று தானே அர்த்தம்.

நிராயுதபாணியாய் வந்த ஃபாரூக்கை கத்தியால் குத்திக் கொன்றது அந்த மதம் இரக்கமற்றது என்பதை தானே காட்டுகிறது.

ஒரு பக்கம் மாட்டு கறி சாப்பிட்டா கொல்றாங்க.
இன்னொரு பக்கம் கடவுள் மறுப்பு கருத்துகளை பேசினால் கொல்றாங்க.

மனிதாபிமானத்தை இழந்து மதத்தை காப்பாற்றுவதனால் என்ன பயன்?
மதம் இருக்கும். ஆனால் மனிதாபிமானம் இருக்காது.

மதம் என்பது கடவுளை அடைய வழிகாட்டும் கருவி.
எப்போதும் கருவியை பற்றியே பேசிட்டு இருந்தால், கடவுளை அடைவது எப்போது?
எதற்காக மதங்கள் உருவாக்கப்பட்டதோ அதன் நோக்கத்தை அனைவரும் மறந்தது வருத்தமான ஒன்று.

பரூக்கின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
பரூக்கை இழந்து தவிக்கும் அவர் குடும்பத்தாரின் மனம் அமைதி அடைய இறைவன் உதவட்டும்.

இதை கேட்ட அனைவருக்கும் நன்றி வணக்கம்.

1 comment:

  1. பாருக்கை படுகொலை செய்து மற்றவர்களை பயமுறுத்தி, தனது மதத்தில் தங்க வைக்க வேண்டிய நிலையில் உள்ள மதம்.

    ReplyDelete

Post Top Ad

Your Ad Spot